Thursday, April 22, 2010

தமிழக அரசியல் சாக்கடைக்குள் சிக்கி தவிக்கும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்

தமிழ் ஈழ மக்களை பகடைக்காயாக வைத்து அரசியலும், பண வருவாயும் சேர்த்து கொள்ள கடந்த 40 வருங்களாய் தமிழக தேசியவாதிகளும் இங்குள்ள சில ஊடகங்களும் ஈடுபட்டுவருகின்றன. இதனால், 2009-ல் ஈழத்தில் மக்களை ஒன்றாய் ஒரு குறுகிய இடத்தில் குவித்து கொத்துக் கொத்தாய் குண்டு போட்டு கொன்றான் சிங்களவன். அப்போதும், தமிழக தேசியவாதிகளாய் நோக்கப்பட்டுவரும் நெடுமாறன், வைகோ, திருமா, வீரமணி போன்றவர்கள் ஈழ மக்களின் துயரை வைத்து அரசியல் சித்து விளையாடியும், அதற்காக பணங்களை கறந்ததும் நடந்தது. ஈழ துடைத்தெடுக்கப்பட்டும், இன்றும் இந்த தேசியவாதிகள் திருந்துவதாய் இல்லை. மாறாய் இன்னும் ஈழ மக்களை வைத்து கறக்க முடியுமா என்றும், தமிழக அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள அறிக்கைகளும், சிறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இன்றைய துருப்புச் சீட்டாய் இவர்களுக்கு கிடைத்த செய்தி தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை பெற்றெடுத்த வயதான முதாட்டி பார்வதி அம்மாள்.

மக்களோடு தன்னுடைய வயதான பெற்றோரையும் வைத்து கடைசி வரை போராடி, தானும் மக்களின் துயரங்களிலும் பங்கெடுத்து வந்தவர் தான் தேசிய தலைவர். அவர் அன்று நினைத்திருந்தால், குறைந்தபட்சம் தன்னுடைய வயதான பெற்றோர்களை தப்பி வைத்திருக்கலாம். அப்படி எண்ணாமல், தன் மக்களுக்கு நேர்ந்த கதிதான் தன்னுடைய பெற்றோருக்கும் என இயங்கி வந்தால் அந்த மாபெரும் தலைவன்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பிறகு, சிங்கள காடையர்களின் பிடியில் இருந்து, பிரபாகரனின் தந்தை இறந்து போனார். இனியும் வயதான பிரபாகரனின் அன்னையை வைத்திருந்தால், தங்களின் அரசியலுக்கு இடஞ்சல் வருமென எண்ணிய சிங்கள இராசபட்சே அரசு, இவரை வெளியேற அனுமதித்தது.

அப்போது, கனடாவில் உள்ள பிரபாகரனின் ஒரு சகோதரிக்கு தெரிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கத்திடம் பொறுப்பை ஒப்படைத்தார். சிவாஜி லிங்கம் 2008 முதல் தமிழகத்தில் தங்கியிருந்து பல தமிழ் தேசியவாதிகளிடம் நப்பை ஏற்படுத்தி கொண்டிருந்தார். அதில் முக்கியமானவர்தான் பழ.நெடுமாறன். பழ.நெடுமாறன் இவருடைய நட்புக்காக தமிழகம் சிவாஜி லிங்கம் வரும் போதெல்லாம், உலகத் தமிழர் பேரமைப்பின் கோட்டூர்புர அலுவலகத்தை கொடுத்து உதவினார். (கோட்டூர்புர அலுவலகமும் ஒரு அவுஸ்த்திரேலிய தமிழர் உலகத் தமிழ் பேரமைப்பிற்கு கொடுத்தது....). இந்த நன்றி மறவா சிவாஜி லிங்கம், நெடுமாறனுக்கு கைத்தடியானார். (சிவாஜி லிங்கம் பெரும்பாலும் தமிழகத்தில் 2008 முதல் 2009 மே வரை தங்கி இருந்ததற்கான இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அது அவருடைய தனிபட்ட வாழ்க்கை என்றாலும், பொதுவாழ்வில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய நேர்மையின்மையை கருதி இங்கு இன்று வரை வெளிவராத செய்தியை தருகிறோம். தமிழர்கள் எல்லாம் மதித்துக் கொண்டிருக்கும் தமிழினப் போராளிகளான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை...இவர்களை ஈழம் பற்ற அறிந்த எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். இந்த மாபெரும் முன்னாள் போராளிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்த பிறகு இன்று அவர்களுடைய குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பது பற்றி தமிழக தேசியவாதிகள் மறந்து விட்டனர். மறப்பதில் நமது தமிழக மக்களையும் இணைத்துக் கொள்ளலாம். இப்படி மறக்கப்பட்ட மேற்சொன்ன ஒரு போராளியின் - இங்கு போராளியின் பெயரை குறிப்பிடுவது போராளியின் தியாகம் கருதி கொடுக்கப்பட வில்லை - சென்னையில் உள்ள குடும்ப துயர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு உதவுவது போன்று, போராளியின் மனைவியை எம்.பி என்ற தைரியத்தில் வலைவிரித்து விழ வைத்ததால்தான், சிவாஜி லிங்கம் அதிக நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்தார் என்பதுதான் இன்னொரு கதை.)

முதலில் பிரபாகரனின் தாயாரை மாலத்தீவுக்கு அனுப்பிய பின்னர், மலேசியவுக்கு வந்து சேர்ந்தார். சிகிச்சைக்காக சென்னை செல்லலாம் என சிவாஜி லிங்கத்திடம் கேட்கப்பட்டதும், சிவாஜி லிங்கம் பத்து நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு விமானத்தில் வந்தார். ஆனால், அப்போதே சென்னை விமான நிலையத்தினுள் இந்திய அரசு அனுமதி மறுத்து திரும்ப கொழும்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், சிவாஜி லிங்கம் நெடுமாறனையும், வைகோவையும் தொடர்பெடுத்து, பார்வதி அம்மாளை கவனித்துக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

இதுதான் தக்கசமயம் என எண்ணிய நெடுமாறன் மற்றும் வைகோவும், தங்களின் ஈழச்சரிவுக்கு ஒரு முட்டு கொடுக்கவும், கருணாநிதியின் அரசியல் செல்வாக்குக்கும் தமிழக மக்களிடத்தில் கெட்ட பெயரை ஏற்படுத்த எண்ணி காய்களை நகர்த்தினர். முதல்வர் கருணாநிதியின் ஈழ துரோகம் தமிழ் மக்களால் என்றும் மறக்க கூடியது அன்று. இதற்காக பல குட்டிகர்னங்களை மே 2008 பின்னர் நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு 100 கோடி ரூபாய் நலத்திட்டங்கள். அவர்களின் வீட்டிற்கு ஒரு டி.வி. அகதிகள் இருக்கும் இடத்தில் கழிப்பிடங்கள், ரோடுகள், அகதிகள் அனைவரையும் இந்திய குடியுரிமை அளிக்கும் திட்டம் என திட்டங்களை வாரி இரைத்து வருகிறார். ஆனாலும், கருணாநிதியின் துரோகம் புலம் பெயர் மக்களால் மறக்க முடியவில்லை. இப்படி 60, 70 ஆண்டுகளாய் அரசியல் செய்து வரும் கருணாநிதியின் குணம் நன்றாய் தெரிந்திருந்தும், நெடுமாறனும், வைகோவும் பிரபாகரனின் தாயாரை அழைத்து வர விமான நிலையம் சென்றனர்.

ஆனால், மலேசியாவில், விசா பெற்றுக் கொண்ட பார்வதி அம்மாளின் செய்திகளை அறிந்து கொண்ட இந்திய உளவுத்துறை, கருணாநிதியிடம் யோசனை கேட்டது. கருணாநிதி, பார்வதி அம்மாள் யாருடைய பின்புலத்தில் தமிழகத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற வருகிறார் என கேட்டுள்ளார். அப்போது, உளவுத்துறை உண்மையை கக்கியது. முதியர் ஒருவர் வந்தாலும், நெடுமாறன்-வைகோ மூலம் வருவது கருணாநிதியால் அனுமதிக்க முடியாது. ஏனெனில், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இவர்கள் இருவரும் நாள்தோறும் அரசியல் செய்வார்கள் என நினைத்தே, சென்னைக்குள் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். பின்னர் அதற்கான காராணத்தை ஜெயலலிதா மீதும் போட்டு தானும் தப்பித்து கொண்டார். இந்நிகழ்வை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள திருமா, வீரமணி, சீமான் போன்றோர் அறிக்கை விட்டு தங்களின் அரசியல் லாபத்தை கூட்டி கொள்ள நினைத்தனர். திரும்பவும், ஈழத்திற்காக ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை போன்றவைகளை கையிலும் எடுக்கின்றனர்.

மனித நேயங்களை மறந்து திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், சாவு வீட்டில் பிணமாகவும் இருக்க நினைக்கும், தமிழக அரசியல் வாதிகளும், தேசிய வாதிகளிடையே சிக்கி தவிக்கும் அந்த மாபெரும் தலைவனை பெற்றெடுத்த அந்த தாயை, இப்போது கருணாநிதி தன்னால் தான் தமிழகத்தில் வர முடிந்தது என்றும், இன்னும் அவர் இங்கு வருவாரேயானால், அவருக்கு தன்னுடைய பொறுப்பிலேயே சிகிச்கை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.

எது எப்படியாயினும், ஈழத்தை வைத்து அரசியல் நடத்தி பணம் பார்க்கும் சுயலாபம் சேர்த்துக் கொள்ள தமிழக அரசியல் வாதிகளும் இயக்க வாதிகளும் முடிவுடன் உள்ளனர். அதற்கு சில ஈழ ஊடகங்களும் துணை நிற்பதுதான் வேதனையிலும் வேதனை!

No comments:

Post a Comment